top of page

விற்பனைப் பத்திரத்தை அறவு செய்து உரிமைமூலம் மற்றும் உடைமையை மீட்டெடுக்கக் கோரும் வழக்கின் காலவரம்பு 3 ஆண்டுகள் என்றும் 12 ஆணடுகள் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது

Updated: Dec 26, 2024

விற்பனைப் பத்திரத்தை (கிரயப் பத்திரம்) அறவு செய்து (set aside or cancel), உரிமைமூலத்தையும் (title), அந்தச் சொத்தின் உடைமையையும் (சுவாதீனம் or possession) மீட்டெடுக்க முயற்சிப்பதற்கான காலவரம்பு (limitation) மூன்று ஆண்டுகள் என்றும் பன்னிரண்டு ஆண்டுகள் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அசல் வாதியின் சட்டப்பூர்வ வாரிசுகள் வழக்குச் சொத்துகளின் முழு உரிமையாளர்கள் என்பதை உறுதிப்படுத்திய கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சாதாரணமாக விற்பனைப் பத்திரத்தை அறவு செய்வதற்கும், உடைமைகளை மீட்டெடுப்பதற்கும் வழக்குத் தாக்கல் செய்யப்படும்போது, அந்த உரிமைமூலம் ஏற்கனவே தொலைந்துவிட்டதாகக் கூறப்படும் என்று அமர்வு தெளிவுபடுத்தியது. நீதிபதிகள் J.B. பார்திவாலா மற்றும் நீதிபதி R. மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்மானித்ததாவது:

"...By seeking to get the Sale Deed set aside on the grounds as may have been urged in the plaint, the plaintiff could be said to be trying to regain his title over the suit property and recover the possession. In such circumstances, the period of limitation would be three years and not twelve years...”

மேல்முறையீட்டாளர்கள் சார்பில் வழக்கறிஞர் தருண் குமார் தாக்கூர் வாதாடினார், மூத்த வழக்கறிஞர் ராஜேஷ் மஹாலே எதிர்மேல்முறையீட்டாளர்கள் சார்பில் ஆஜரானார். சர்ச்சைக்குரிய சொத்துக்கள் மீதான உரிமைமூலத்தை விளம்புகை செய்யவும் நிரந்தரத் தடை உறுத்துக்கட்டளை கோரியும் அசல் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் பிரதிவாதிகள் தனது குடும்பம்தான் வழக்குச் சொத்துக்களுக்கு முழு உரிமையாளராக இருப்பதாகச் சாற்றுரைத்துள்ளனர். வாதியின் மரணத்திற்குப் பிறகு, அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் வழக்கைத் தொடர்ந்தனர். விசாரணை நீதிமன்றம் வாதியின் உரிமைமூலம் நிறுவப்பட்டாலும், அவர் சொத்துக்களின் உடைமையை மீட்டெடுக்கக் கோரத் தவறிவிட்டார் என்று வழக்கை தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, சட்டப்பூர்வ வாரிசுகள் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். முதல் மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் முடிவை மாற்றியமைத்து, மேல்முறையீட்டை அனுமதித்தது, வாதிக்கு ஆதரவாக வழக்கை தீர்ப்பளித்தது. பின்னர் காலவரம்பு மற்றும் எதிரிடை உடைமை தொடர்பான பிரதிவாதிகளின் வாதங்களை நிராகரித்து உயர் நீதிமன்றமும் இந்த முடிவை உறுதி செய்தது.

 உரிமைமூலத்தின் அடிப்படையில் உடைமைக்காக வழக்கு தொடரப்பட்டால், உரிய ஆவணங்கள் மற்றும் பிற சான்றுகளின் அடிப்படையில் உரிமைமூலம் நிறுவப்பட்டவுடன், பிரதிவாதி குறிப்பிட்ட காலத்திற்கு எதிரிடை உடைமையை நிரூபித்தாலன்றி வாதியின் வழக்கை தள்ளுபடி முடியாது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேல்முறையீட்டாளர்களின் தரப்பில் வழக்கு காலவரம்புச் சட்டத்தின் 58 வது கூறின் படி நிர்வகிக்கப்பட்டு காலத்தடையுற்றது என தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற வாதத்தை நிராகரித்தும், ராஜ்பால் சிங் -எதிர்- சரோஜா (இறந்ததனால்) அவரின் சட்டபூர்வ வாரிசுகள் மற்றும் பலர் என்ற தீர்வுமுடிவு இவ்வழக்கிற்கு பொருந்தாது என்றும் தீர்மானித்து, மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


மல்லவ்வா மற்றும் ஒருவர் -எதிர்- கல்சம்மனாவர கலாம்மா (இறந்ததனால்) சட்டப்பூர்வ வாரிசுகள் & மற்றும் பலர்.

Comments


bottom of page